Monday, February 14, 2005

அல்காரிதம்

நடுச்சாமக் கிறக்கத்தில்
நான்
என் அல்காரிதத்துடன்
புணர்ந்துகொண்டிருக்கும் தருணத்தில்
புத்தகக் குவியலின் வலக்கோடியில்
துருத்தித் தலைநீட்டிய
அக் கவிதைத் தொகுதி
கண்ணை உறுத்தும்.

கைகள்
அர்த்தமாய்ப் பரபரக்க...

அல்காரிதத்தைக் கிடப்பிலிட்டு
கவிதைப் புத்தகத்தை
வாஞ்சையாய்க் கையிலெடுப்பேன்.

பயமுறுத்தும் அட்டைப்படமும்
புரியமாட்டாதிருக்கும்
கவிதை சாத்தியமும்
தரும் கிளர்ப்பில்
சிலிர்த்துப்
புத்தகம் பிரிப்பேன்.

முகவுரை படித்து
முதற் கவிதை
தன் வனப்பை
என்முன் வைக்கும்.

சில நொடிக் கழிச்சலில்...

புத்தகப் பக்கங்கள்
பறந்து கொண்டிருக்க...

அல்காரிதப் பேய்
கண்முன் விரிய...

விஸ்வரூப தரிசனம்.

யதாஸ்தானமாய்
அக் கவிதைத் தொகுதி
புத்தகக் குவியலில்
துருத்தி தலைநீட்டும்
தன் இயல்பில் ஒன்றும்.

நானும் அல்காரிதமும்
மறுபடி புணர...

எதுவும்
இயல்பினின்றும்
பிறழ்வதே இல்லை.

புணர்வெறியில் அல்காரிதமும் நானும்.

புத்த்கச் சமாதியில்
நிதம் அடக்கம் செய்யப்படும்
அந்தக் கவிதைத் தொகுதியும்.

No comments: